அணு ஆயுதத்துடன் நீருக்குள் பாயும் டிரோன் சோதனை வெற்றி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
மாஸ்கோ: அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தார். இந்த சோதனை தேவையில்லாதது என்றும் ஏவுகணைகளை சோதிப்பதற்கு பதிலாக உக்ரைனில் ரஷ்யா முதலில் போரை தீர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோன் ‘போஸிடான் சூப்பர் டார்பிடோ’ வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த டிரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது. பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி டிரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை. அதை நிறுத்துவது சாத்தியமற்றது’ என்றார். இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.