டிரோன் மூலம் அளவீடு செய்ய அனுமதி திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தம்: ஒன்றிய அரசு ஐகோர்ட் கிளையில் வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு ெசாந்தமானது என ஒன்றிய அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் வாதிடப்பட்டது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஐகோர்ட் மதுரை கிளையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, 3வது நீதிபதி விஜயகுமார் விசாரித்து வருகிறார். அவர் முன் நேற்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ‘‘ஒட்டுமொத்த மலையும் ஒன்றிய தொல்லியல்துறைக்கு சொந்தமானது. மலையிலிருந்து 200 மீட்டருக்கு தொலைவில் தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை டிரோன் மூலம் அளவீடு செய்ய மதுரை விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால்தான் எல்லையை நிர்ணயிக்க முடியும்’’ என்றார்.
தர்கா நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘‘தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை இந்து அமைப்புகள் தடுக்க முடியாது. கோயில்கள், சர்ச்கள் போல் தர்காவிலும் வழிபட உரிமை உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை பற்றி ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது பற்றி 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், 1931ல் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மலையை ஸ்கந்தர் மலை, சிக்கந்தர்மலை, சமணர் குன்று என மக்கள் விரும்பியவாறு அழைப்பதற்கு தடை இல்லை. சுப்ரமணியசுவாமி கோயில் அருகே வெயிலுக்குகந்த அம்மன் கோயில் உள்ளது. அங்கு ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. தர்கா பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம்தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை ஆக. 25க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.