திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த ட்ரோன் பறிமுதல்
*யூடியூபர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பறக்க விடப்பட்ட ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீசார், யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று ஆய்வு செய்தார்.
மலைப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில், தீபத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நீதிபதி ஆய்வின் போது மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை மீது ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் ட்ரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், ட்ரோன் கேமரா குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த ட்ரோன் கேமரா, மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த யூடியூபர் மணி என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.
அவரை அழைத்து போலீசார் விசாரித்ததில், நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் பறக்க விட்டதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. யூடியூப் வீடியோவிற்காக யதார்த்தமாக வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.