‘ட்ரோன் பைலட்’ ஆன முதல் திருநங்கை
*புதுக்கோட்டையை சேர்ந்தவர்
புதுக்கோட்டை : புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை முதல் ட்ரோன் பைலட்டானார்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருநங்கை ஷிவானி (40). பட்டதாரியான இவர், திருநங்கைகள் நல சங்கத்தின் செயலாளராக உள்ளார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள ரிமோட் ட்ரோன் பைலட் சென்டர் மூலம் நபார்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் ‘ட்ரோன் பைலட்’ பயிற்சியை ஷிவானி முடித்தார். அதன் பிறகு, தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் தீபக் குமார் கூறியதாவது: துல்லியமான வேளாண்மை, பயிர் கண்காணிப்பு, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை குறித்த இடத்தில் தெளிப்பதற்கு ட்ரோன் அவசியமாகி உள்ளது. ட்ரோன் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ரசாயன அபாயம் நீங்குகிறது.
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகளுக்குப் பின் பயிர் காப்பீடு மதிப்பீட்டிலும் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தற்போது ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், திருநங்கை ஒருவர் இத்தொழிலை தொடங்குவது இந்தியாவில் இதுதான் முதன் முறை. ஷிவானிக்கு தேவையான ட்ரோன் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.