ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிய டிடிஎப் வாசன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!!
சென்னை: ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிய டிடிஎப் வாசன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎப் வாசன் (24). இவர் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டி அந்த வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களை பின் தொடர வைத்துள்ளார். மேலும், இவர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இதனால், போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டதால், டிடிஎப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டாலே, நீதிமன்றத்தை நாடி புதிய லைசென்ஸ் வாங்கலாம் என்றும், மனுதாரரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஏற்கெனவே 3 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே புதிய லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். அதற்கு நீதிபதி, “ஆறு மாதங்கள் கடந்துவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்பது அவசியமில்லை. லைசென்ஸ் வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளை அணுக வேண்டும்” எனக்கூறி டிடிஎப் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.