ஓட்டுநர்-நடத்துனர் பணியிடங்களுக்கு 27ம் தேதி எழுத்து தேர்வு
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் விரைவு போக்குவரத்து கழகங்களில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டதுடன் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணிநியமனமும் வழங்கப்பட்டன. இதையடுத்து 3,274 ஓட்டுநருடன் நடத்துனர் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அதன்படி, மாநகர போக்குவரத்து கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 ஆகிய பணியிடங்களுக்கான இடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏப்ரல் 21ம் தேதி விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஓட்டுநர் - நடத்துனர் பணிக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு எழுதுவதற்கான நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) வரும் 21ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எழுத்து தேர்வுகள் முடிவடைந்த பின்னர், செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.