ஸ்ரீவில்லி. வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தணிக்கும் குடிநீர் தொட்டி: கூடுதலாக அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி விலங்குகளுக்கு பெரும் பயன் அளித்துவரும் நிலையில், கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அழைக்கப்படுகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டெருமைகள், செந்நாய்கள், பெரிய அளவிலான பாம்புகள் என ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், தொடர்ச்சியாக மழை இல்லாததால் தற்போது இந்தப் பகுதியில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியான மழையின்மை காரணமாக கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் பல்வேறு பகுதியில் அமைத்துள்ள குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினர் சமீபத்தில் அமைத்த சோலார் பம்ப் தண்ணீர் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர் வன விலங்குகளின் தாகத்தை தணிப்பதற்கு பேருதவியாக உள்ளது. இந்த தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீரை தேடி வந்து குடித்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தணித்துச் செல்கின்றன. இந்தத் தொட்டியில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் விலங்குகள் எந்த நேரத்திலும் இங்கு வந்து தண்ணீர் அருந்த முடியும். இந்த குடிநீர் தொட்டி பெரும் பயன் அளிக்கும் நிலையில், கூடுதலாக வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.