ஆறிப்போன கஞ்சி மாதிரி விஜய்: அமைச்சர் துரைமுருகன் நையாண்டி
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டி: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக சென்று நிவாரண தொகை வழங்காமல் வங்கி மூலம் செலுத்தியது, அவங்க மெத்தட், அவர் போகாததற்கு நான் என்ன பண்ணுவேன். அந்தக்கட்சிக்கு எது எதிர்காலமோ அதை அவர்கள் தான் செய்ய வேண்டும். எல்லாரும் அவரைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு அவர்தான் பதில் தர வேண்டும்.
ஆனால் இன்றுவரை வெளியே வராமல் உள்ளேயே இருக்கிறார். அது எந்த அளவுக்கு அவருக்கு பலன் தரும் என தெரியவில்லை. கிராமத்தில் சொல்லுவார்கள் ஆறிப்போன கஞ்சி மாதிரி என, அந்த மாதிரி போய்விடும். அதற்குள் துக்கத்தை மறந்து விடுவார்கள். அதை எல்லாம் எண்ணிப்பார்க்கக்கூடிய அரசியல் சாதுரியம் அவர்களுக்கு இருக்கா? என எனக்கு தெரியாது.
ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. கட்சியை நடத்துகிற தலைவருக்கு முகத்தில் 2 கண் அல்ல உடல் பூராவும் கண் இருக்க வேண்டும். உடல் முழுவதும் சிந்திக்கிற திறமை இருக்க வேண்டும். அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்து ெசல்லும் திறமை எந்த கட்சிக்கு உள்ளதோ, அந்த கட்சி வெற்றி பெறும், செழிப்படையும். அது இல்லாத கட்சி கொஞ்சம் காலத்தில் இல்லாமல் போகும். எந்த அளவுக்கு மழை வந்தாலும் தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு, வேண்டிய நடவடிக்கையை எடுத்துள்ளோம் என முதல்வரே கூறியுள்ளார். வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.