உள்ளாடைகள் தேர்வும், உளவியல் தீர்வும்!
உடைகளை காட்டிலும் உள்ளாடைகளுக்கு அதீத முக்கியத்துவமும் தரமும் கொடுக்க வேண்டும் என்பார்கள் ஃபேஷன் ஆர்வலர்கள். உள்ளாடைகள் தான் நாம் வெளியில் அணியும் ஆடைகளை அழகாகவும், நல்ல தோற்றத்துடனும் காண்பிக்கும். மேலும் நல்ல உள்ளாடை தான் நம்மை நாள் முழுவதும் வசதியாகவும், எவ்வித இடையூறும் இல்லாமல் வைத்திருக்கும். அதனால்தான் உள்ளாடை தேர்வில் கவனம் தேவை என்பர். மேலும் உள்ளாடைகள் உளவியல் ரீதியாகவும் நிறைய பலன்களை கொடுக்கிறது’’ என்கிறார் மருத்துவ உளவியலாளர் எஸ்.வந்தனா(clinical Psychologist)
“Inner wear அல்லது lingerie உள்ளாடைகள் என்கிறது இன்னொரு தோல் என்பது ஃபேஷன் உலகம். உள்ளிருந்து தன்னம்பிக்கைக் கொடுக்கும் பலம் உள்ளாடைகளுக்கு உண்டு. ஈர்ப்பு மற்றும் வசதி (attractive & comfort) இந்த இரண்டும் சேர்ந்து தான் உள்ளாடைகள் தேர்வு இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை திருமணத்திற்கு முந்தைய காலம் அதாவது டீன் ஏஜ் முதல் திருமணத்திற்கு முன்பான இளம் வயது வரை ஈர்ப்பை மட்டுமே மையமாக வைத்து உள்ளாடைகளை தேர்வு செய்கிறார்கள் இளைஞர்கள். திருமணத்திற்கு பிறகு வசதி , உடலை உருத்தாத உள்ளாடைகள் என தேர்வு செய்கிறார்கள். ஆனால் எந்த வயதிலும் உள்ளாடைகள் ஈர்ப்பு மற்றும் வசதி என இரண்டையும் மனதில் வைத்து தான் தேர்வு செய்யப்பட வேண்டும். சரியான அளவில் இல்லாத உள்ளாடைகளை தேர்வு செய்து அணிந்து செல்லும் பொழுது அன்றைய நாள் முழுக்க நம்மால் எந்த செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. உடலை இருக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது உடலின் அளவை விட பெரியதாக இருந்தால் அதுவும் சங்கடத்தை உண்டாக்கும். சரியான உள்ளாடைகள் வெளியில் அணியும் எளிய உடைகளை கூட நல்ல தோற்றத்தில் மற்றவர்களுக்கு காண்பிக்கும். நல்ல தோற்றமே நமக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடும். எனவே உள்ளாடைகள் உளவியல் ரீதியாக பலன்களை கொடுக்கும் என்பது உறுதி” என்னும் மருத்துவர் வந்தனா உள்ளாடைகள் தான் நம் உரிமை மற்றும் சுதந்திரம் என்கிறார்.
“என்னை கேட்க யாரும் இல்லை, இது எனக்கான உரிமை, யாரும் என்னை பார்க்க மாட்டார்கள் என நமக்கிருக்கும் முழு சுதந்திரம் நம் உள்ளாடைகளில் உண்டு. இதைத் தாண்டி நாம் வெளியில் போடும் உடைகளில் கூட ஏதோ ஒரு கேள்வியும் அல்லது கட்டுப்பாடும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் உள்ளிருக்கும் உள்ளாடைகளுக்கு எந்த கேள்வியும் கிடையாது. தேர்வு செய்வது முதல் அணிவது வரை நம் உரிமைதான். என் கையில் அதில் ஏன் நாம் எல்லை வகுக்க வேண்டும். பிடித்த நிறத்தில் உள்ளாடைகள், பிடித்த டிசைன்களில் உள்ளாடைகள், தரமான உள்ளாடைகள் இது அனைத்தும் உள்ளாடைகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டும். அதேபோல் ஒரு சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு அல்லது மகப்பேறுக்கு பிறகு உள்ளாடைகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. வீட்டில் தானே இருக்கிறோம் என்கிற காரணத்தால் உள்ளாடைகள் மீதான ஆர்வத்தை குறைத்து விடுவார்கள். பொதுவாக அதிகம் உள்ளாடைகள் அணியாமல் இருந்தால் மார்பகங்கள் தளர்ந்து விடவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் உடலின் வடிவமைப்பிலும் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையும் குறையும். எனவேதான் வீட்டிலேயே இருந்தால் கூட நல்ல வசதியான உள்ளாடைகளை பகல் நேரத்தில் அணிவது அவசியம்” என்னும் வந்தனா உடல் மீதான உளவியல் சிக்கல்களுக்கும் உள்ளாடைகள் தான் மருந்து என்கிறார்.
“சைக்காலஜி ஆஃப் ஃபேஷன் படிப்பில் உடல் தோற்றத்தால் உளவியல் இடையூறு (Body Image Disturbance) என்கிற ஒரு பகுதியே இருக்கிறது. வசதியான உள்ளாடை நம் உடல் வடிவமைப்பையே மாற்றி தோற்றத்தை அழகாக காட்டும். ஒருவேளை உடல் வடிவமைப்பிலேயே பிரச்சனைகள் இருந்தால் கூட தரமான உள்ளாடைகள் மூலம் இதனை சரி செய்யலாம் என்கிறது சைக்காலஜி ஆஃப் ஃபேஷன். இதில் உடல் தோற்றத்தால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையை சரி செய்யலாம். வயதுக்கு வந்த நாள் முதல் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவது பெண்களுக்கு அவசியம். ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இருக்கும் அல்லது மிகவும் சிறிதாக இருக்கும், அவர்கள் அவர்களது மார்பகங்களை சரியாக காட்டும் உள்ளாடைகளை அணியும் பொழுது பெரியதோ, சிறியதோ, சீரான தோற்றம் தரும் விதமாக காட்டும் நிலைக்கு மாறும். ஒரு சிலர் நாள் முழுவதும் வெளியிலேயே அலைந்து திரிய வேண்டிய வேலையில் இருப்பார்கள். அவர்கள் நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்தால்தான் அவை உறுத்தி தோலை எரிச்சல் ஊட்டாமல் இருக்கும். அதில் நல்ல துணிகளில், தரமான உள்ளாடைகள் தேர்வு அவசியம். தோலுடன் ஒட்டிய இன்னொரு தோலாக இருப்பவை உள்ளாடைகள்தான், அவற்றை. தேர்வு செய்யும் பொழுது கவனம் அவசியம். ட்ராப்ளஸ், பேக்லெஸ், புஷ் பேக், புஷ்அப், இப்படி ஒவ்வொரு உடைக்கும் கூட தனித்தனி உள்ளாடைகள் இருக்கின்றன. எந்த உடைக்கு என்ன உள்ளாடை தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்தும் கூட நம்முடைய தோற்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஷாலினி நியூட்டன்.
