தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் பெண்களுக்கு ரூ.1000 திட்டம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும் போது, திராவிட மாடல் 2.0 அரசிலும் மாதம்தோறும் 1000 உதவித்தொகை நிச்சயம் தொடரும் என்று புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.223 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 577 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.201 கோடி 6 லட்சம் மதிப்பீட்டில் 103 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 43,993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடி 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று யார் சொன்னார்? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அதிமுகவும் சொன்னார்கள். ஆனால், நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம். அப்போதும், என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்று அவர்கள் வதந்தியை கிளப்பினார்கள். ஆனால், அதற்கு மாறாக இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம்.

1000 ரூபாய் எதற்கென்று சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன். எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற மாதாந்திர சீர் என்று என்னுடைய சகோதரிகள் சொல்கிறார்களே. இது உதவித்தொகை இல்லை, உரிமைத்தொகை. இந்த தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள். “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?” கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள். நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும். நான் உறுதியோடு சொல்கிறேன்.

தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும்போது திராவிட மாடல் 2.0 அரசிலும் நிச்சயம் தொடரும். சமூக முன்னேற்றத்திற்காக விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவுவதற்காக, எளிய மனிதர்களை அரவணைப்பதற்காக, பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கி விடுவதற்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். எந்த ஊருக்கு சென்றாலும் ஒரு புது திட்டம் தொடக்கம், திட்டங்களின் விரிவாக்கம் என்று நாம் செயல்படுவதால்தான் எதிரிகள் கிலி பிடித்து இருக்கிறார்கள்.

அதுவும் வாக்குவங்கி, தேர்தல் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், எல்லா தரப்பினருக்குமான திட்டங்களாக நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இப்படி திராவிட மாடல் செயல்படுத்தும் திட்டங்கள், பிற மாநிலங்களுக்கும் மாடலாக அமைந்திருக்கிறது. தெலங்கானா, பஞ்சாப்பில் நம்முடைய முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தியா தாண்டி கனடாவிலும் இப்போது இது செயல்படுத்தப்படுகிறது. இதுதான் திராவிட மாடலுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

அதுமட்டுமா, இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறோம் என்று குற்றச்சாட்டை வைத்தது யார் பாஜ. அந்த பாஜவே அவர்கள் ஆளும் மகாராஷ்டிரா மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதேபோல் விடியல் பயணம் திட்டமும், எல்லா மாநிலங்களிலும் வரிசையாக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று வருகிறது. அப்படி சொன்ன கட்சிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்போது உலக நாடுகளே பின்பற்றுகிறது.

நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து வாக்குறுதியை கொடுத்து ஸோர்தான் மாம்தானி அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர், ஏழை எளிய மக்கள் பக்கம் நின்று இந்த வாக்குறுதியை தந்ததும், பெரும் பணக்காரர்கள் பக்கம் நின்ற அதிபர் டிரம்ப், நியூயார்க் மாநகரத்திற்கான நிதியை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டி பார்த்தார். ஆனால், இந்த மிரட்டல், அதட்டல்களை மீறி, மாம்தானிதான் வெற்றி பெற்றார். ’எல்லோருக்கும் எல்லாம்’ என்று இயங்குவதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. அதனால்தான் கவனத்துடன், தொலைநோக்கு சிந்தனையுடன்செயல்பட்டு வருகிறோம். ஆனால், சிலர் இதுபோன்ற திட்டங்களை மதிக்காமல், அரசியல் உள்நோக்கத்துடன் ஆட்சியை குறை சொல்கிறார்கள்.

எதிர்கட்சி என்றால், எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை. ஆனால், இன்றைய எதிர்கட்சிகள் மக்கள் நலத்திட்டங்களையும், பயன்பெறும் மக்களையும் கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். என்ன செய்வது அவர்களின் குணம், அப்படி அவர்களுக்கு தெரிந்த பண்பாடு அவ்வளவுதான். என்னை பொறுத்தவரைக்கும் போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். நம்முடைய பணி, மக்கள் பணி. நாம் அதை பார்ப்போம் என்று செயல்பட்டு வருகிறேன். எதிர்கட்சிகள் என்ன பொய் சொன்னாலும், பொறாமையில் மக்கள் நலத்திட்டங்கள் தேவையில்லை.

ஆயிரம் ரூபாய் வேண்டாம் என்று சொல்லி கொச்சைப்படுத்தினாலும், மக்கள் அவர்களை மதிப்பதில்லை. தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பேட்டியளிக்கும் மக்கள் பலரும் நம்முடைய ஒவ்வொரு திட்டத்தையும் ஆதரித்து பேசுகிறார்கள். ஏன்? எனக்கு முன்பு இங்கு ஒரு தம்பி பேசினாரே. ஒரே குடும்பத்தில் எத்தனை திட்டங்களில் பலன் பெறுகிறோம். தெளிவாகவும், ஆதாரத்தோடும் சொன்னாரே. இதுதான் எதிர்க்கட்சிகளின் அந்த பொய்களுக்கான அந்த தம்பியின் பதிலடி.

இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முக்கியமான வேண்டுகோள் பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமக்குதான் போடப்போகிறீர்கள். இந்த ஆட்சி தான் வரவேண்டும் என்று போடப்போகிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை, தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான். அதைக்கூட அவர்கள் பல மாநிலங்களில் செய்யவில்லை.

மற்ற மாநிலங்களிலிருந்து வரும் செய்திகளை படிக்கும்போது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் செய்திகளில், சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். அரியானா மாநிலத்தில் அநியாயமாக நடந்திருக்கிறது. ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் எம்.பி. ஒருவரே, இரண்டு மாநிலங்களில் வாக்களித்து வெளிப்படையாக போட்டோ போட்டிருக்கிறார்.

அந்த மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது வாக்களித்த 35 லட்சம் பேரால் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ராகுல்காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பதுங்குகிறார்கள். இது ஏதோ சம்பந்தம் இல்லாத பிரச்னை போன்று அமைதியாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். உங்களின் வாக்கு சாவடியில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை. அந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் ஆணையமே அதை செய்ய நினைத்தாலும் மக்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யநாதன், கலெக்டர் அருணா, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* ‘மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்து போனேன்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: நியோ டைட்டல் பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமராவதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளுடன் 766 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்துப்போனேன். இந்திய மாநிலங்களை கடந்து, உலக அளவிலும் அங்கீகாரம் பெறும் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் 2026 தேர்தல் வெற்றியுடன் இன்னும் வீரியத்துடன் தொடரும். ஆனால், அதற்கு முன்பாக நம்முன் உள்ள பணி எஸ்ஐஆர்ல் இருந்து நம் வாக்குரிமையை பாதுகாப்பதே. இதுகுறித்து தொடர்ந்து பேசவேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளர்.

* 7வது முறையாக திமுக ஆட்சி உறுதி

விழா மேடையில் இருந்து இறங்கி பயனாளிகள் மத்தியில் நடந்து சென்ற முதல்வருக்கு உற்சாகமாக கை கொடுத்து மகிழ்ந்தனர். அப்போது பலர் கொடுத்த மனுக்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:

எஸ்ஐஆர்-ஐ தேவை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?

முதல்வர்: எஸ்ஐஆர் தேவைன்னு சொல்லி இருக்காரா? எஸ்ஐஆரை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று திமுகவின் பெட்டிஷனில் ஏன் இணைந்துள்ளார்.

கடுமையான விமர்சனங்களை எடப்பாடி வைத்துள்ளாரே?

முதல்வர்: எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையில்லை. அதனால் விமர்சனங்களை முன் வைக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.

புதுக்கோட்டை கூட்டத்தை பார்க்கும்போது மனசு எப்படி இருக்கு?

முதல்வர்: கூட்டத்தை பார்க்கும்போது மட்டுமல்ல, எப்போதுமே மனசு நன்றாக தான் இருக்கிறது.

எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றினாலும் எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றனரே?

முதல்வர்: எதிர்கட்சிகளுக்கு வேறு வேலை கிடையாது. அதனால் அவர்கள் விமர்சனத்தை செய்தாக வேண்டும்.

2026 தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்குமா?

முதல்வர்: எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். 7வது முறையாக திமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

எதிர் கட்சியின் பலவீனத்தை பலமாக பார்க்கிறீர்களா?

முதல்வர்: எதிர்கட்சியின் பலவீனத்தை பலமாகவும் பார்க்கவில்லை. பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

* முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவன் நெகிழ்ச்சி

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனங்களை வழங்கிய முதல்வர், பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறை கண்காட்சி அரங்குகளை நேரில் பார்வையிட்டார். அப்போது இலுப்பூர் விளாப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (19) பேசுகையில், நான் 10ம் வகுப்பு படிக்கும்போது எங்க அப்பா சிறுநீரக நோயால் இறந்து விட்டார். 5 மாதத்தில் அக்கா, மாமாவும் இறந்து விட்டார்கள். அக்காவுக்கு ஒரு மகன், மகள். என் அம்மா கூலி வேலை செய்கிறார். அக்கா, குழந்தைகளை பார்ப்பதால் என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் 2 குழந்தைகளையும் அக்கா அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தார். அதன்மூலம் அன்புகரங்கள் திட்டத்தில் 2 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவி தொகை கிடைக்கிறது. எனக்கும் படிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்ததால் நான் முதல்வன் திட்டம் மூலம் ஐடிஐயில் சேர்த்து விட்டனர். வெல்டர் படித்து வரும் எனக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவிதொகை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி என் அம்மாவுக்கு விதவைக்கான உதவி தொகையும் கிடைக்கிறது. இந்த உதவியை செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Advertisement