திராவிட மாடல் என்றால் டென்ஷன் ஆகிறார்கள் தமிழகத்தை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்தணும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: திராவிட மாடல் என்று அண்ணா, கலைஞர் சொல்லாததை ஸ்டாலின் ஏன் சொல்கிறான் என்று டென்ஷன் ஆகிறார்கள். தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தாம்பரம் அடுத்த மறைமலை நகரில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று சுயமரியாதை மாநாடு நடந்தது. அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் வாழ்த்துரை வழங்கினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பிறகு நிறைவு விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிகப் பிரமாண்டமாக உருவாக்கிக் கொண்டு வருகின்ற ‘பெரியார் உலகத்துக்கு’ திமுக சார்பில் பங்களிக்காமல் இருக்க முடியுமா? மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘பெரியார் உலகத்துக்கு’ திமுக பங்களிக்காமல் இருக்க முடியுமா?
எனவே, என்னுடைய ஒரு மாத சம்பளத்தை பெரியார் உலகத்துக்காக கொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதைப் பற்றி, கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ராசாவிடம் சொன்னேன். உடனே அவர்கள் நாம் இன்றைக்கு வளர்ந்து ஆளாகி மரியாதையுடன் நிற்கிறதே பெரியாரால் தான் நீங்கள் அறிவிப்பு செய்யுங்கள். திமுகவின் 126 எம்.எல்.ஏ.,க்கள், மக்களவை, மாநிலங்களவையைச் சார்ந்திருக்கக்கூடிய 31 எம்.பி.,க்கள் ஆகியோருடைய ஒரு மாதச் சம்பளத்தையும் சேர்த்து வழங்குவோம் என்று சொன்னார்கள்.
எங்கள் எல்லோருடைய ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அந்தப் பணத்தை பெரியார் உலகத்துக்கு மகிழ்ச்சியோடு, நன்றி உணர்வோடு வழங்குவதில் நாங்கள் எல்லோரும் பெருமை அடைகிறோம். தமிழ்நாடு ஏன் தனித்து, உயர்ந்து நிற்கிறது என்பது புரியும், பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். அண்ணா எழுந்தார், அடுத்து, தலைவர் கலைஞர் வந்தார், கலைஞருக்குப் பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் என்றார்கள். மக்களின் ஆதரவோடு நான் வந்தேன்.
என்னைப் பற்றி என்னென்னவோ பொய்களை எல்லாம் பரப்பி பார்த்தார்கள், இப்போதும் பரப்புகிறார்கள் நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டுமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகின்ற அரண் தான், திராவிட மாடல்.
அதனால் தான், “அண்ணாவும், கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் சொல்கிறான்?” என்று டென்ஷன் ஆகிறார்கள். அவர்களுக்கு எரியட்டும் என்று தான் நானும் திரும்பத் திரும்ப திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அடுத்து, திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம், வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது, தமிழினம் தன்னை காத்துக் கொள்ள வேண்டிய சமுதாய தேர்தல் கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம்.
வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம், இதை திராவிடத்துக்கு எதிரான பாஜவும், \”திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்ன பழனிசாமி அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.
அதற்கான கொள்கை தெளிவும் போராட்டக் குணமும் செயல் திட்டமும் ஒற்றுமை உணர்வும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தான் இருக்கிறது. எனவே, ஏழாவது முறையும் திமுக ஆட்சியில் அமர்த்திட, இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.
தமிழ்நாடு எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் நிலைமையை உறுதி செய்ய பகுத்தறிவுச் சிந்தனையையும் சுயமரியாதை உணர்வையும் மக்களிடையே தொடர்ந்து விதைத்திட இந்தக் கருஞ்சட்டை பட்டாளம் உறுதிமொழி எடுக்கும் மாநாடுதான், இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிடர் கழக மாநில மாநாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும் உறுதி எடுப்போம், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.