இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். நேற்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய ஜனாதிபதி, இன்று காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்.
நிலக்கல்லில் இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் 11 மணியளவில் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சன்னிதானம் சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து, சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதியிடம் இருமுடியை பெற்றுக் கொண்டார்.