வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள்
*கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலிலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. உப்பனாறு வாய்க்கால் மேம்பாலத்தை காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையுடன் இணைக்கும் பணிகள் நடந்தும் வரும் நிலையில், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருப்பினும், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலில் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. தூர்வாரும் பணியுடன் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.