வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்து திமுக உரிய நிவாரணம் பெற்று தரும்: என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேட்டி
சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக சட்டத்துறைத் தலைவர் இரா. விடுதலை தலைமை தாங்கினார். சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. முன்னிலை வகித்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், சூர்யா வெற்றிக்கொண்டான், ஜெ.பச்சையப்பன், துணைச் செயலாளர்கள் பெ.ரகு, சந்திரபோஸ், என்.மருதுகனேஷ், ராஜாமுகமது, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன், கே.மறைமலை, சுவை சுரேஷ், எஸ்.எஸ்.மனோஜ், மூ.தினேஷ்குமார், எம்.எஸ்.பி.வீரமணி, மீஞ்சூர் கே. சுரேஷ், எ. கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி: 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் இறந்தவர்கள், குடிமாறியவர்கள் பட்டியலில் வருகிறார்கள். இரண்டையும் சேர்த்தால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வருகிறார்கள். இதில் யாரெல்லாம் முறையற்ற வகையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால், திமுக சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுத் தரும். இவ்வாறு அவர் கூறினார்.