டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கருவிழி மாற்று சிறப்பு மையம்: மொரீஷியஸில் தொடக்கம்
சென்னை: கண் சிகிச்சை பராமரிப்பில் முன்னோடியாக இருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மொரீஷியஸ் நாட்டின் எபீன் நகரில் கருவிழிப்படல மாற்று சிகிச்சை மற்றும் நுண்துளை பியூபிலோபிளாஸ்டி சிறப்பு மையத்தை தொடங்கி இருக்கிறது. இந்த மையத்தை மொரீஷியஸ் குடியரசின் அதிபர் தரம்வீர் கோகுல் திறந்து வைத்தார். மேலும், மொரீஷியஸ் நாட்டிற்கான இந்தியாவின் தூதர் அனுராக் வஸ்தவா முன்னிலை வகித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளிலும் மேம்பட்ட கருவிழிப்படல அறுவைசிகிச்சைகள் செய்வதற்கான முதன்மை அமைவிடமாக இந்த நவீன கண்சிகிச்சை மையம் உருவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மையத்தில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் உலகளவில் முன்னோடியாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பார்வைத்திறன் மீட்பு சிகிச்சைகள் வழங்கப்படும்.
இந்த மையத்தில் ப்ரீ டெசமெட்ஸ் எண்டோதெலியல் கெரடோபிளாஸ்டி, கருவிழிப்படல அலோஜெனிக் இன்ட்ராஸ்ட்ரோமல் ரிங் செக்மெண்ட், ஊசித்துளை பியூபிலோபிளாஸ்டி. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கும் கெரட்டோகோனஸ் (கூம்பு விழிப்படலம்) மற்றும் சீரற்ற அஸ்டிக்மாடிசம் (சிதறல் பார்வை) போன்ற குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதில், இந்த செயல்முறைகள் உலகளவில் மிகப் புதுமையான, திறன்மிக்க தொழில்நுட்ப உத்திகளாக கருதப்படுகின்றன.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் பேசியதாவது:
இந்தியாவின் மருத்துவ கண்டுபிடிப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் எங்களின் தொலைநோக்கு பார்வையை இந்த தொடக்கம் உறுதிப்படுத்துகிறது. இது வெறும் விரிவாக்கம் மட்டுமல்ல; நவீன கண் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதியின் வெளிப்பாடு. மொரீஷியஸ் அதிபர் இந்த மையத்தை திறந்து வைத்தது எங்களுக்கு கிடைத்த பெரும் கவுரவமாகும்.