வரதட்சணை டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை; அதிமுக பிரமுகர், மனைவி, மகன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர், மகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா அல்லிகுண்டம் வி.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த தம்பதி அக்னி -செல்வி. இவர்களது இளைய மகள் பிரியதர்ஷினி(28). மதுரை செல்லூரை சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். அதிமுக பிரமுகர். மனைவி தனபாக்கியம். இவர்களது மூத்த மகன் ரூபன்ராஜ்(30) என்பவருக்கும், பிரியதர்ஷினிக்கும் கடந்த 2024 செப்.5ல் திருமணம் நடந்தது. இந்த சூழலில் வரதட்சணை கொடுமையால் பிரியதர்ஷினி அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை வருமாறு : திருமணத்திற்கு பின் ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி தம்பதி செல்லூரில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். ரூபன்ராஜின் சகோதரியான சாந்தினிதேவிக்கு 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், அதேபோல் பிரியதர்ஷினிக்கும் நகைகள் போட வேண்டும் என மாமனார் அக்னி, மாமியார் செல்வி கூறியுள்ளனர். அதற்கு தங்களால் அவ்வளவு நகை போட முடியாது எனக்கூறி 126 பவுன் நகையை வரதட்சணையாக பிரியதர்ஷினியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே பிரியதர்ஷினியிடம் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், கடந்த மார்ச் 15ம் தேதி கூடுதல் நகைகள் கேட்டு தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த பிரியதர்ஷினி, மதுரை பீபீகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் குப்பணம்பட்டியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே கொடுத்த 126 பவுன் நகையுடன் மேலும் 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான், பிரியதர்ஷினி நல்ல முறையில் கணவருடன் சந்தோஷமாக வாழ முடியும் என மிரட்டியுள்ளனர். இத்தோடு விடாமல் பிரியதர்ஷினியை வீட்டில் இறந்த எலியை எடுத்து வெளியே போடச் சொல்லியும், நாய் மலத்தை அள்ளிப்போட சொல்லியும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் செல்லூர் போலீசார் ரூபன்ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர் கொடுமையால் பிரியதர்ஷினியை, பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஆக.28ல் கணவர் ரூபன்ராஜ், மாமனார், மாமியாரான இலங்கேஸ்வரன், தனபாக்கியம், நாத்தனார் சாந்தினிதேவி, உறவினர்களான உமா மகேஸ்வரி, சிங்கத்தமிழன், முகுந்தன், வாசுகிதேவி, தேவராஜ் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி பிரியதர்ஷினி வருத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஆக.29ல் காலையில் வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் பிரியதர்ஷினி, செல்லூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் கணவர் வீட்டார் சேர்த்துள்ளனர். பிறகு பெற்றோருக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது, மகளின் இடது கையில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. இதுதொடர்பாக பிரியதர்ஷினியின் தாய் செல்வி, தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில், கடந்த ஆக.30ம் தேதி பிரியதர்ஷினி இறந்துள்ளார்.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் ரூபன்ராஜ், பெற்றோர் இலங்கேஸ்வரன், தனபாக்கியம், சித்தப்பா ரமேஷ், உமாமகேஸ்வரி, சிங்கத்தமிழன், வாசுகிதேவி, முகுந்தன், சகோதரி சாந்தினிதேவி, தேவராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி செல்லூர் போலீசில் பிரிதயர்ஷினியின் தாய் செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்லூர் போலீசார் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, பிரியதர்ஷினியின் உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.