தேனியைச் சேர்ந்த பெண் ஆசிரியரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய காவலர் பூபாலன் கைது..!!
மதுரை: தேனியைச் சேர்ந்த பெண் ஆசிரியரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன், மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றுகிறார். இவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7, 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையில் பூபாலன் வரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கியதில் காயமடைந்ததாக கூறி, மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார். திருமணத்தின்போது 60 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவைகளை வழங்கினோம். ஆனால், மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு காவலர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கினார் எனவும் அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரின்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் தனது மனைவியை கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் டார்ச்சர் செய்ததாக தங்கையிடம் பூபாலன் சிரித்தபடி பேசும் அதிர்ச்சிகரமான ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ வைரலான நிலையில் போலீஸ்காரர் பூபாலன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை தேடிவரும் நிலையில் பூபாலன் மற்றும் அவரது தந்தையான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரனை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மனைவியை வரதட்சணை கொடுமை செய்த வழக்கில் தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள அவரது பெற்றோர், சகோதரிக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். பூபாலன் தந்தை செந்தில்குமார், விஜயா, அனிதா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.