இரட்டை கொலையை ஸ்டேட்டஸ் வைத்த ஏட்டு, 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). இவரது உறவினர் விவசாயி மந்திரம் (50). இருவரும் கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 25ம் தேதி இரவு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த உறவினரான கோமு(65) தனது மனைவி, மகனை பிரித்ததாக தகராறு செய்து, அரிவாளால் இருவரையும் வெட்டி கொலை செய்தார்.
கோமு இருவரையும் அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் விசாரித்தார். இந்த வீடியோ காட்சிகளை கயத்தாறு ஏட்டு பால்தினகரன் மற்றும் ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் அஜ்மீர்காஜா முகைதீன், அருண்குமார் ஆகியோர் தங்களது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஆக பதிவு செய்து வலைத்தளங்களில் பரவச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.