பொழுதைப் போக்கி நேரத்தை விரயமாக்காதீர்கள்!
பள்ளி மாணவர்களின் கல்வி, அவர்களின் எதிர்காலக் கனவுகள் ஆகியவற்றைச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. காலாண்டுத் தேர்வே இப்போதுதான் நடக்கவுள்ளது. அதற்குள் முழு ஆண்டுத் தேர்வுகள், அரசு தேர்வுகள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் வீணாக்கப்படும் நாட்கள் மீண்டும் வராது என்பதை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு, அரசுத்தேர்வு என்பதைக் கருத்தில் கொண்டால், மார்ச் மாதம் என்ற அளவுகோலில் ஏறத்தாழ 170 நாட்கள் இருக்கின்றன. இந்நேரத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் இவர்களின் சிந்தனை என்ன? எவ்வாறு முழு ஆண்டு மற்றும் அரசுத் தேர்வுக்குத் தயாராவது? பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்குப் பிறகு என்ன குரூப் எடுக்கலாம்? பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலக் கனவுகள் என்ன? உயர்கல்விக்கு எங்குச் சேர்வது? அல்லது சேர்கின்ற படிப்புகளின் எதிர்காலம் என்ன? என்னென்ன அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் உள்ளன? எப்பொழுது அவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்? அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் ? நுழைவுத் தேர்வுகள் அல்லது படிப்புகள் என்ன? அவற்றிற்கு என்ன கல்வித் தகுதி தேவை? என்பது போன்ற பல வினாக்களுக்கு நம்மில் பலர் தாமதமாகத்தான் விடை தேடுகிறோம்.
இவ்வினாக்களுக்கான பதில் அந்த மாணவர் மற்றும் பெற்றோர்களைச் சார்ந்தது. மாணவர்களின் கனவுகள் நிறைவாக என்ன செய்ய வேண்டும்? அவர்கள் விரும்பிய படிப்பு கிடைக்குமா? அதற்கு என்ன செலவாகும்? என்ற சவாலான சூழ்நிலை!
இத்தருணத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்
1) பத்தாம் வகுப்பு மாணவர்கள்(State / CBSE/ International /ICSE) அவர்கள் எதிர்காலப் படிப்பில் என்ன குரூப் எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
2) பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்((State/CBSE/ International)தாங்கள் எடுத்துப் படித்த குரூப்பிற்கு ஏற்ப என்ன இளநிலைப் படிப்பில் சேர வேண்டும்? தாங்கள் படித்து வரும் குரூப்பிற்கு ஏற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் என்ன? இவற்றிற்கு விண்ணப்பிப்பது எப்படி? விதிமுறைகள் என்ன? பயிற்சி முறைகள் என்ன? நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகள் என்ன? இவற்றை மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.
‘கற்க கசடற’:
மாணவர்களின் “திட்டமிடல்” மிக இன்றியமையாதது. “நேர மேலாண்மை” கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று . காற்று மழை போன்ற பருவநிலை இடர்ப்பாடுகள் குடும்ப விழாக்கள் போன்றவை ஊடாக இருப்பினும் இவற்றைத் தாண்டி, கல்வி, தங்கள் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு இருக்கின்ற நாட்களை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்கள் இந்தத் திட்டமிடலுக்கும், நேர மேலாண்மைக்கும் மாணவர்களுக்கு உதவி புரிய வேண்டும். குழப்பம் இல்லாமல் தெளிவான திட்டமிடல் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை..
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் மாணவர்களின் மனநலம், உடல் நலம் இவை சரியான நிலையில் இருக்கும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது இன்றியமையாதது. இந்த கல்விப் பயிற்சி செம்மையாக அமைய வேண்டுமானால், தினம் சிறிது நேரம், குறிப்பிட்ட நேரத்தில், விளையாட்டு, யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் தேவை.
படிக்கும் காலத்தில் கைப்பேசி, ஒலி ஒளிஊடகம், தேவையற்ற பொழுதுபோக்குகள், உள்ளிட்ட மனச் சலனங்களுக்கும் வாய்ப்பு உண்டு. இவற்றில் வீ ழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின் கடமை. அவர்களுக்கு இவை தற்போது தேவையற்றது என்பதைப் புரியவைக்க வேண்டும். பொழுதுபோக்கால் காலம் விரயமாகுமே தவிர, வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற விருட்சமாகாது.
கணினி, கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட கருவிகள் கல்விக்குத் தேவையான வகையில் பயன்படுத்த வேண்டுமே தவிர, பொழுதுபோக்கிற்கு அல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தினம் பிள்ளைகளிடம் அவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களைச் சிறிது நேரம் கலந்துரையாட வேண்டும். அவர்கள் அன்றாடம் படிக்க பெற்றோர்கள் திட்டமிடத் துணை புரியவேண்டும்.
கற்றனைத்தூறும் அறிவு:
இயற்கையின் சூட்சுமத்தில் இன்றியமையாத ஒன்று; ஒப்பற்ற பரிசு அறிவு. நாம் பெற்ற அறிவு காப்பாற்றப்படவும்; இன்னும் ஆக்கபூர்வமான அளவில் மேன்மை பெறவும்; கல்வி துணை புரியும். படிக்கின்ற பாடங்கள் குறுக்கு வழி இன்றி கற்கப்படும்போது அறிவு மேம்படும். இந்த அறிவு தேர்வில் வெளிப்படும்.
ஆறு கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள மணற்பாங்கான இடத்தில் ஆழமாக தோண்டத் தோண்ட, இன்னும் அதிக அளவு நீர் கிடைப்பது போல தான் கல்வி கற்க கற்க அறிவு மேம்படும். எனவே, பாடங்கள் முழுமையாக தன் வயப்படுகின்ற வரை படிக்க வேண்டும். மேலும் மேலும் படிக்க வேண்டும். தேர்வுகள் என்பவை வாழ்வியல் பாதையில் நாம் ஏதேனும் ஒரு வகையில் சந்திக்க வேண்டிய ஒன்று. தேர்வுகள் போட்டித் தேர்வுகள் இவை, பள்ளி, கல்லூரி படிப்புகளில் மட்டுமின்றி, வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கும். இவற்றைத் திறம்பட சந்திக்கக் கற்கின்ற கல்வி, மேற்கொள்ளும் செயல், இவற்றைச் சரியாக அமைத்துக் கொண்டால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. தேர்வுகள் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் நாம் சந்திக்கின்றபோது மன உளைச்சல், பயம் இவை எல்லாம் வர நேரிடலாம். இது இயல்புதானே! இவற்றைத் தவிர்க்க அன்றாடம் படிப்பது, புரிந்து படிப்பது அடிப்படைத் தேவையாகிறது.
பெற்றோர்கள் கவனத்திற்கு..!
கல்வி விலைமதிப்பற்றது. விலை போட்டு வாங்க இயலாத ஒன்று. ஏதோ நிறைய பொருள் செலவு செய்துவிட்டால் நல்ல படிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். தரமான உயர்கல்வி பெற மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன், கவனமுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் பெற்றோர்கள் ஊட்ட வேண்டும்.
மாணவர்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தக்கூடிய அமைதியான படிக்கும் இடத்தை வீட்டில் உருவாக்குங்கள். தேவைப்படும்போது உதவி மற்றும் ஊக்கத்தை வழங்குங்கள். அவர்களின் கல்விக்கான செயல்பாடுகளில் உண்மையான ஆர்வத்தைக் காட்டுங்கள். உங்கள் குழந்தையின் பெரிய மற்றும் சிறிய சாதனைகளை அங்கீகரியுங்கள். அவர்களின் முன்னேற்றம், முயற்சி மற்றும் மீள்தன்மையைக் கொண்டாடுங்கள். இந்த நேர்மறையான வலுவூட்டல் கல்வியின் மதிப்பை வலுப்படுத்துகிறது மற்றும் வெற்றிக்காகத் தொடர்ந்துப் பாடுபட அவர்களை ஊக்குவிக்கும்.