நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தேர் செய்ய தங்கக்கட்டி நன்கொடை: அமைச்சர்கள் பங்கேற்பு
ஆலந்தூர்: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தேர் செய்ய நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கட்டியை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். சென்னை நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்க விழா இன்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை தங்கத்தேர் செய்யும் ஸ்தபதியிடம் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், பல்லாவரம் ஆகியோர் ஒப்படைத்தனர்.
முன்னதாக புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் இ.கருணாநிதி எம்எல்ஏ, கூடுதல் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர் இரா.வான்மதி, ரேணுகாதேவி, துணை ஆணையர் ஹரிஹரன், ஆலய தக்கார் கோதண்டராமன், உதவி ஆணையர் பாரதிராஜா, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் எம்.சந்திரன், கவுன்சிலர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்கா தேவி நடராஜன், சாலமோன், சுதா பிரசாத், அய்யம் பெருமாள் கலந்துகொண்டனர்.