நீலகிரி முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை: சுமங்கலா யானைக்கு காயம்
கூடலூர்: முதுமலை முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளன. இங்கு குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அபயாரண்யம் முகாமில் சுமங்கலா (37) மற்றும் சங்கர் (34) உள்ளிட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலையில் சுமங்கலா மற்றும் சங்கர் ஆகிய 2 யானைகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த சங்கர் யானையின் பாகன் விக்னேஸ்வரன் சண்டையில் இருந்து 2 யானைகளையும் பிரித்து விட முயன்றுள்ளார். ஆனால் 2 யானைகளும் பாகனை தாக்கியதாக தெரிகிறது. சண்டையில் சுமங்கலா யானைக்கு உடலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சுமங்கலா யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். யானையின் உடலில் கூர்மையான ஆயுதம் குத்தியதால் ஏற்பட்ட காயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் சுமங்கலா யானை ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.