உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்
இஸ்லாமாபாத்: வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசிம்முனீர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல், குஜ்ரன்வாலா மற்றும் சியால்கோட் ராணுவ தளங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவருக்கு படைப்பிரிவின் செயல்பாட்டுத் தயார் நிலை மற்றும் போர் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடிய முனீர், அவர்களின் உயர்ந்த மன உறுதி மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மேலும் கடுமையான மற்றும் இலக்கு சார்ந்த பயிற்சிகளின் முக்கியத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் ராணுவ தளபதி முனீர், ‘‘பாகிஸ்தான் ராணுவம், விரோதமான கலப்பினப் பிரசாரங்கள், தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு முயலும் பிளவுபடுத்தும் சக்திகள் உட்பட உள்நாடு மற்றும் வெளியில் இருந்து வரும் சவால்கள் இரண்டிலும் முழுமையான கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்தார்.