வேதாரண்யம் அருகே 7 அடி நீள டால்பின் இறந்து கரை ஒதுங்கியது
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்பரப்பில் பாலூட்டி இனமான டால்பின் மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை ஆழமான கடற்பரப்பு மட்டுமின்றி கரையோரத்துக்கு வந்து மீன்களை உண்பது வழக்கம். கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படும். இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே 7 அடி நீளமுள்ள 150 கிலோ எடையுள்ள ஒரு டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து டால்பின் மீனை பார்வையிட்டனர். அப்போது மீன் உடலில் எந்த காயங்களும் தென்படவில்லை. இதனால் டால்பின் மீன் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் டால்பின் மீன் புதைக்கப்பட்டது.