தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி : தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தய தீர்ப்பை நிறுத்திவைத்தது. மேலும், விளங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி மாநகராட்சி ஆகியவை தவிர மற்ற மாநிலங்கள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், இது வெளிநாடுகளின் பார்வையில் நமது நாடு குறித்து மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தனர்.
மேலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாத மாநில மற்றம் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அவ்வாறு ஆஜராகாவிட்டால் நீதிமன்றத்தை நாங்கள் ஆடிட்டோரியத்தில் நடத்துவோம் என கண்டிப்புடன் கூறினர். இந்த நிலையில் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் வரும் 3ம் தேதி, ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
