நாய் கடி தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத 25 மாநில தலைமை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் சமீபத்தில் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,” தெரு நாய் விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கானா, மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை தரப்பில் இருந்து மூன்று பதில் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கியும் மற்ற மாநிலங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யாதது ஏன்?. மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன?, உங்களது தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சில மாநில அரசுகள் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
அதனை ஏற்க முடியாது. ஏனெனில் பத்திரிக்கைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் விரிவாக இதுகுறித்த செய்திகள் வந்துள்ளன. அதைக்கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? .வழக்கின் விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யாத 25 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.