மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா..? இல்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள்: கேரளா ஐகோர்ட் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த பகுதியில் மீள் கட்டமைப்பு பணிகள் மிகபெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீள் கட்டமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்பர்வையிட்டனர். அது தொடர்பாக வழக்கில் கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக உயர்நீதிமன்றம் சாடியுள்ளது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்க கூடிய கடன் தொகை நிலுவையாக உள்ளது. அந்த கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என வாதத்தை முன்வைத்தனர். இதில் மிகுந்த ஏமாற்றமடைந்த உயர்நீதிமன்ற அமர்வு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். அதில் நீதிபதிகள் ஜெய்சங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் அமர்வு நீண்ட பட்டியலை கொண்ட கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதில், கேரள மக்களுக்கு உதவ ஒன்றிய அரசுக்கு மனம் உள்ளதா..? மனமில்லை என்றால் தைரியமாக சொல்லிவிடுங்கள். உங்களுடைய கருணையை எதிர்பார்த்து இந்த மாநில மக்கள் இல்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற இக்கட்டான சூழலில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் கூட எங்களால் உதவ முடியாது என வெளிப்படையாக கூறிவிட்டால் அந்த மாநில மக்கள் எந்த இக்கட்டான சூழலிலும் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதை குறைந்தபட்சம் மக்கள் தெரிந்துகொள்வார்கள். அதை சொல்வதில் என்ன பிரச்சனை உள்ளது.
எற்கனவே தெளிவுபடுத்திய பின்பும் ஒன்றிய அரசு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டு விதிகளின் பின்னால் ஒளிந்துகொள்ள கூடாது. குறைந்தபட்சம் இதுபோன்ற சூழலில் மனம் இறங்கி அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரவேண்டும். அதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றிய அரசு விதிகளின் பின்னால் சென்று ஒளிந்துகொள்கிறது என்ற கருத்தை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
இதேபோல் இயற்கை பேரிடர் நிகழ்ந்த போது பாஜக ஆளக்கூடிய குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வாறு முன்வந்து ஒன்றிய அரசு உதவிகளை வழங்கியது போன்ற கட்டுரைகளை எல்லாம் நீதிபதிகள் படித்துகாட்டினர். இந்த வழக்கில் சம்பந்தபட்ட வங்கிகளை இணைக்க வேண்டும். கடன் தொகையை செலுத்த அந்த மக்களை நிர்பந்திக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.