இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த 2 மருத்துவர்கள் கைது: பயங்கரவாத சதிக்கு திட்டமா என விசாரணை
பஹ்ரைச்: நேபாள எல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 2 மருத்துவர்களை பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். டெல்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையின் ரூபைதிஹா சோதனைச் சாவடியில் நேற்று காலை சசஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி) படையினரும், மாநில காவல்துறையினரும் இணைந்து வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேபாளத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஹசன் அம்மான் சலீம் (35) மற்றும் இந்திய மாநிலமான கர்நாடகாவின் உடுப்பியை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் வம்சாவளி சுமித்ரா ஷகீல் ஒலிவியா (61) என்பதும், இருவரும் மருத்துவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இந்தியாவிற்குள் நுழைவதற்கான முறையான விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் எதுவும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது, ‘நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாக’ கூறியுள்ளனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைய முயன்றதற்கான தெளிவான காரணத்தை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும், இவர்களது உண்மையான நோக்கம் என்ன, இவர்களின் பின்னணி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் பயண விவரங்கள் குறித்து காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.