போதை பொருட்கள் கடத்தல் வழக்கு டாக்டர் கைது; திடுக்கிடும் தகவல்கள்
அண்ணாநகர்: சென்னையில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் டாக்டரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அண்ணாநகர் துணைஆணையார் சினேகா பிரியா உத்தரவின்படி, அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்ததாக விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரியில் படித்த இம்மானுவேல் ரோகஎன் என்பவரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி(30), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார் பைனான்சியர் சுபாஷ்(29) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இம்மானுவேல் ரோகன் கொடுத்த தகவல்படி, அரும்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த வாலிபர் ஈஸ்வரை (25) கைது செய்து நடத்திய விசாரணையில், ‘’ரஷ்யா நாட்டில் 5 வருடம் எம்பிபிஎஸ் மருத்துவர் படிப்பு முடித்துவிட்டு ஒரு வருடத்துக்கு முன்பு சென்னைக்கு வந்து அரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் கம்பெனியில் மருத்துவராக பணிபுரிந்து உள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் செல்போனில் யார், யாரிடம் பேசியுள்ளார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.