உங்க வீட்டில் வைஃபை வேகத்தை அதிகரிக்கணுமா...? இதை செய்யுங்க... முதல்ல...!!
இணைய தேவை என்பது இன்று அனைவருக்குமே இன்றியமையாதது. அதிலும், குறைந்த இணைய வேகம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அப்படி, நீங்களும் வீட்டில் பலவீனமான வைஃபையுடன் போராடி வருகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்களான ரூட்டர் வைப்பதற்கான சரியான இடம், எக்ஸ்டன்ஷன்களை பயன்படுத்துதல் மற்றும் நெட்வொர்க்கை பாதுகாத்தல் போன்ற எளிய உதவி குறிப்புகள் உங்கள் இணைய வேகத்தையும், கவரேஜையும் அதிகரிக்க உதவும்.
இப்போதெல்லாம், இணையம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அடிப்படை தேவையாகிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது பொழுதுபோக்காக ஸ்ட்ரீமிங் செய்வது என எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் வலுவான வைஃபை இணைப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், பலர் தங்களது வீட்டில் பெரும்பாலும் பலவீனமான வைஃபை சிக்னல்களால் அவதிப்படுகின்றனர். மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இணைய பிரச்னைக்கு அவர்களே பங்களிக்கிறார்கள்.
எனவே, வைஃபை சரியாக வேலை செய்யவில்லை என்றால், சில எளிய மாற்றங்களுடன் அதன் வேகம் மற்றும் கவரேஜை மேம்படுத்தலாம். உங்கள் வீட்டு நெட்வொர்க்கிலிருந்து அதிக பலன்களை பெற சில எளிய குறிப்புகள் இதோ....
1ரூட்டர் வைக்க சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்: மக்கள் பெரும்பாலும் தங்களது ரூட்டரை ஒரு மூலையில், தரையில் அல்லது பிற பொருட்களுக்கு பின்னால் வைப்பார்கள். இவை அனைத்தும் சிக்னலை பலவீனப்படுத்தும். அதற்கு பதிலாக, அதை வீட்டின் மையத்திலும், உயரமான இடத்திலும் வைக்கவும். சுவர்கள், உலோக பொருட்கள், மைக்ரோவேவ் அல்லது கம்பியில்லா தொலைபேசிகளுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில், இவை சிக்னலில் தலையிடக்கூடும்.
2சிக்னல் குறுக்கீட்டை குறைக்கவும்: புளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் பிற வயர்லெஸ் கேட்ஜெட்டுகள் போன்ற சாதனங்கள் உங்கள் வைஃபை சிக்னலை சீர்குலைக்கலாம். அத்தகைய சாதனங்களிலிருந்து ரூட்டரை விலக்கி வைப்பது நல்லது. மேலும், பல வைஃபை நெட்வொர்க்குகள் அருகிலேயே இயங்கினால், சிக்னல் குறுக்கீட்டை குறைக்க உங்கள் ரூட்டரை நெரிசல் குறைந்த சேனலுக்கு மாற்றவும்.
3ரூட்டரை மேம்படுத்தவும்: உங்கள் ரூட்டர் 3 - 4 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றால், அதை மேம்படுத்துவதை கருத்தில் கொள்ளவும். வைஃபை 6 அல்லது 6E-ஐ ஆதரிக்கும் டூயல்-பேண்ட் அல்லது டிரை-பேண்ட் ரூட்டரை தேர்வு செய்யவும். 5 GHz பேண்ட் குறுகிய வரம்பில் நல்ல வேகத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், 2.4 GHz பேண்ட் நீண்ட தூரங்களுக்கு சிறந்த கவரேஜை வழங்குகிறது.
4சாஃப்ட்வேர் அப்டேட்: உங்கள் ரூட்டரின் ஃபார்ம்வேரை தொடர்ந்து புதுப்பிப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இது, செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
5வைஃபை எக்ஸ்டெண்டர் அல்லது மெஷ் சிஸ்டம்: பெரிய வீடுகளில், சில அறைகள் சரியாக சிக்னல்களை பெறாமல் போகலாம். வைஃபை ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் அல்லது மெஷ் வைஃபை சிஸ்டத்தை நிறுவுவது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தடையற்ற கவரேஜை உறுதி செய்கிறது.
6நெட்வொர்க்கை பாதுகாத்தல்: வலுவான பாஸ்வேர்டு மற்றும் WPA2/WPA3 குறியாக்கத்துடன் உங்கள் நெட்வொர்க்கை பாதுகாக்கவும். இது, உங்கள் இணையத்தை அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும். மேலும், இது வேகத்தை பராமரிக்கவும் உதவும்.
7ஹெவி டிவைஸ்களுக்கு வயர்டு இணைப்பு: ஸ்மார்ட் டிவிகள், கேமிங் கன்சோல்கள் அல்லது டெஸ்க்டாப் கணினிகளை ஈதர்நெட் கேபிள் மூலம் நேரடியாக இணைக்கவும். இது, உங்கள் வைஃபையில் சுமையை குறைத்து, ஒட்டுமொத்த நெட்வொர்க் செயல்திறனை மேம்படுத்துகிறது.