தமிழகத்தில் திமுகவுக்கு யாரும் போட்டியில்லை; எம்ஜிஆருக்கு இருந்ததை விட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு அதிகம்: அமைச்சர் கே.என். நேரு பேட்டி
நெல்லை: நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகம் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே என் நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லையில் நடந்த பாஜக கூட்டத்தில் அமித்ஷா திமுகவை வேரோடு பிடுங்கி அகற்றுவோம் என சொல்கிறார். விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும். 15 ஆண்டுகளாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. வருங்காலத்திலும் திமுக தான் வெற்றி பெறும்.
நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது.
தமிழகத்திற்கு இதுவரை அமித்ஷா மூன்று முறை வந்து விட்டார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். எடப்பாடி எப்போதும் தனித்து ஆட்சி என்கிறார். இதற்கு அமித்ஷாவும் விளக்கம் சொல்லவில்லை. எடப்பாடியும் விளக்கம் சொல்லவில்லை. அதிமுக-பாஜக கூட்டணியை அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுமக்கள், மகளிர் போன்றோர் மிகப்பெரிய ஆதரவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தந்து வருகின்றனர். எம்ஜிஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை தாண்டி இப்போது முதல்வருக்கு அவர்களது ஆதரவு பெருகிவருகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். மீண்டும் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். தமிழ்நாட்டில் திமுகவிற்கு போட்டியே கிடையாது. எதிரில் யார் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.இவ்வாறு அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.