திமுக நிர்வாகி சுட்டுக் கொலையில் 5 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: உறவினரின் வீட்டருகே நாட்டுத்துப்பாக்கி மீட்பு
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சியில் உள்ள கிராங்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45), விவசாயி. திமுக கிளைச்செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது மனைவி சரிதாவுடன் தனது மிளகு தோட்டத்திற்கு பைக்கில் சென்றபோது, மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது. கரியகோயில் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலையில் ராஜேந்திரனின் பெரியப்பா மகன்களான சகோதரர்கள் ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான ராஜேந்திரனின் மனைவி சரிதாவும், தனது கணவர் கொலையில் ராஜமாணிக்கம் தரப்பினருக்கு தான் தொடர்பு இருக்கும் என புகார் தெரிவித்துள்ளார். காரணம், அவர்கள் குடும்பத்திற்கும், ராஜேந்திரனுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது. அதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. அதனால் அவர்கள் தான், இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த 2 பேரிடம் இருந்தும் எவ்வித தகவல்களையும் பெற முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
இவ்வழக்கில் கொலையாளிகளை பிடிக்க கூடுதல் எஸ்பி சோமசுந்தரம் மேற்பார்வையில் டிஎஸ்பிக்கள் சுரேஷ்குமார், சத்யராஜ், இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், வேல்முருகன், சண்முகம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகளை அமைத்து எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டார். இத்தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். அதில் இன்று காலை, கொலையான ராஜேந்திரனின் உறவினர்கள் 3 பேரை பிடித்து வந்தனர். அவர்களிடமும் கொலை குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலை சம்பவம் நடந்த காட்டுப்பகுதி மற்றும் கிராங்காடு கிராமத்தில், கொலையாளிகள் நடமாட்டம் பற்றி அறிய தடயவியல் நிபுணர்களுடன் தனிப்படை போலீசார் தீவிர சோதனையை நடத்தினர். அதில், கொலையான ராஜேந்திரனின் உறவினரான நடுத்தம்பி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை போலீசார் மீட்டனர். ஏற்கனவே நடுத்தம்பிக்கும், ராஜேந்திரனுக்கும் முன்விரேதம் இருந்தது. அதனால், அவரை பிடித்து விசாரிக்க தேடியபோது, அவர் இல்லை. இதனால் அவரது மகன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் பிடித்து வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நிலத்தகராறில் இக்கொலை நடந்ததா? அல்லது வேறு காரணத்திற்காக இக்கொலை நடந்ததா? என்பதை அறிய போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மேலும், ராஜேந்திரனின் உடல் இன்னும் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை. கொலையாளிகளை கைது செய்தால் தான், உடலை பெற்றுக்கொள்வோம் என அவரது மனைவி சரிதா மற்றும் உறவினர்கள் கூறிவிட்டனர். அதனால் அவர்களிடம் போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.