மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்(எஸ்ஐஆர்) பணிகள் குறித்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, மு.பெ.சாமிநாதன், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எஸ்ஐஆர் குறித்து களத்தில் சந்திக்கும் சவால்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுடன் மற்றவர்களுக்கு உதவும் சிறப்பான, எளிமையான வழிமுறைகள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்து விடக்கூடாது.
நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் எஸ்ஐஆர் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் பிஎல்ஓக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே எஸ்ஐஆர் குறித்து புரியவில்லை என்று சொல்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜ செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான்” என்று பேசினார்.
இந்த நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள எஸ்ஐஆர் ஆபத்து. கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்ஐஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,
இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்து விடக்கூடாது