திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமனம்
சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா. அதிமுகவில் இஸ்லாமிய தலைவர்களில் முக்கிய தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் அதிமுக-பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகளை அன்வர் ராஜா தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை எடப்பாடி நீக்கினார்.
தொடர்ந்து பாஜவுடன் அதிமுக உறவை முறித்துக்கொண்டதால், மீண்டும் அதிமுகவில் இணைந்து அன்வர் ராஜா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி மீண்டும் அதிமுக- பாஜ கூட்டணி ஏற்பட்டது. இந்த முடிவை அன்வர் ராஜா கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து அதிமுக நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார். திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10ன்படி திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.