திமுகவை மிரட்டிப்பார்க்கவே அமலாக்கத்துறை ஊழல் புகார்: அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
திருச்சி: திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக ஊழல் புகார்களை அமலாக்கத்துறை கூறுகிறது என அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமலாக்கத்துறையினர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின் போது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அது குறித்து ஆய்வு செய்யுமாறும் தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அமலாக்கத்துறை செய்யலாம். தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
விசாரணையில் நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். அதிமுக கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார். முக்கியமாக, எஸ்ஐஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும், ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும் , நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.