திமுக துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு; பொன்முடி, மு.பெ.சாமிநாதனுக்கு பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து துணை பொதுசெயலாளர்கள் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக 5 பேர் இருந்து வருகின்றனர்.
அதாவது அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்பிக்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் அந்த பதவியை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கை என்பது 5 என்பது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 பொதுச் செயலாளர்கள் புதிதாக நியமித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்டதிட்ட விதி 17-பிரிவு:3-ன்படி க.பொன்முடி எம்எல்ஏ, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுசெயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்முடி ஏற்கனவே இந்த பதவியை வகித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.