திமுகவுடன் கூட்டணியா? விரைவில் அறிவிப்பேன்: ராமதாஸ் பரபரப்பு பேச்சு
சேலம்: கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். திமுகவுடன் கூட்டணியா என்பது போக போகத் தெரியும் என்று சேலத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் தெரிவித்தார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: சேலம் மாவட்டம், பாமகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்த மாவட்டம். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து, துல்லியமான ஒரு தேதி டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்பேன்.
நிச்சயமாக வெற்றி கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன். கூட்டணி சம்பந்தமான செய்திகள், உங்கள் செவிக்கு நிச்சயமாக வந்து சேரும். அது நல்ல செய்தியாக இருக்கும். நல்ல கூட்டணியாகவும் இருக்கும். நீங்கள் கட்சியை மேலும் வளப்படுத்துங்கள். இளைஞர்களால் தான் எதையும் சாதிக்க முடியும். குறிப்பாக பெண்களின் வாக்குகள் தான் அதிகம். பெண்கள் வாக்களித்தால், நாம் நிச்சயமாக வெற்றி பெற முடியும். முதலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சிறப்பாக அமைந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ முறையாக அறிவிக்கப்படும் என்றார். திமுகவுடன் கூட்டணியா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, போக, போகத்தான் தெரியும்’ என ராமதாஸ் பதிலளித்தார்.
* கூட்டணி நிலைப்பாடு விரைவில் அறிவிப்பு அன்புமணி பேட்டி
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி , ஈரோடு மாவட்டத்தில் நேற்று மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் மஞ்சள் விவசாயம் குறித்து அன்புமணி பார்வையிட்டு மஞ்சள் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அன்புமணி அளித்த பேட்டியில் பாமக தேர்தல் கூட்டணி நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.