மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் நடத்துகிறது : திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ
சென்னை : பாஜகவுக்கு சாமரம் வீசவேண்டும் என்ற நோக்கத்திற்காக SIR-ஐ அதிமுக வரவேற்றுள்ளது என்று இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,"திமுக எடுத்து வைத்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதில் மக்களிடையே பெரும் குழப்பம் உள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு உதவி செய்ய திமுகவினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள சிக்கல்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை திமுக தொடர்ந்து கூறி வருகிறது.
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பொதுமக்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்ய உதவி வருகின்றனர். எஸ்ஐஆர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் உண்மைக்கு புறம்பானது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகுதான் அதிமுகவுக்கு அதில் உள்ள சிக்கல்கள் தெரிகிறது. பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக எஸ்ஐஆருக்கு ஆதரவு அளிக்கிறது. அதிமுகவின் நிலைப்பாடு தவறு என்பதை அக்கட்சியினர் உணர்ந்துள்ளனர். திமுக ஏன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை எதிர்க்கிறது என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. பாஜகவும் அதிமுகவும் திமுக மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி ஆகும். தமிழ்நாட்டுக்கும் அசாமுக்கும் என்ன வித்தியாசம்; அங்கு எஸ்.ஐ.ஆர். இல்லை எஸ்.ஆர். மட்டுமே உள்ளது. பி.எல்.ஓ.க்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். முறையான பயிற்சி அளிக்கப்படாமல் பி.எல்.ஓ.க்களை மக்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். ஒரே ஒரு நாள் தேர்தல் நடத்துவதற்கு ஆணையம் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.,"இவ்வாறு தெரிவித்தார்.