திமுக - அதிமுக கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதம் துடியலூரில் ரூ.3.27 கோடியில் நவீன பேருந்து நிலையம்
*மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
கோவை : கோவை துடியலூரில் ரூ.3.27 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டம் துவங்கியதும், கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் - மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பில் பேருந்து நிலையம் இல்லாததால், தினமும் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து நிற்பதால் போக்குவரத்துக்குக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு துடியலூரில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3.27 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
போத்தனூர் சத்திரம் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் சென்டர் கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ. 98.70 மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்படும். மணியக்காரன்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு சுற்று சுவர் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளுக்காக ரூ.52.70 லட்சம் செலவிடப்படும்.
மேலும், மாநகர பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு, முகாம்கள் மூலம் வெறிநோய் தடுப்பு ஊசி போடுதல், கால்நடை மருத்துவர் மற்றும் நாய் பிடிப்பவர்களுக்கான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 103 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், 75வது வார்டு கவுன்சிலர் அங்குலட்சுமி பேசுகையில், ‘‘வீரகேரளம் நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. இதனால் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை மேம்படுத்தி தர வேண்டும். வார்டில் பல பகுதியில் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன இதனை சீரமைத்து தர வேண்டும்’’ என்றார்.
* 51 வது வார்டு கவுன்சிலர் அம்சவேணி பேசுகையில், ‘‘பாரதிபுரம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அடியில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் குப்பையில் தீ பிடித்தால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
* 30 வது வார்டு கவுன்சிலர் சரண்யா பேசுகையில், ‘’கணபதியில் உள்ள மாநகராட்சி பள்ளியை சுற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
* 18வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘எனது வார்டில் விடுபட்ட சாலை பணிகளை பட்டியலிட்டு கொடுத்துள்ளேன். அதனை விரைவாக முடித்துக்கொடுக்க வேண்டும்.’’ என்றார்.
* கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், ‘‘55வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 4 ஏக்கரில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவால் மக்களுக்கு பயனில்லை. பாம்புகள் வர வாய்ப்புள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்கு பதிலாக உள்விளையாட்டு அரங்கம் அமைக்கலாம்’’ என்றார்.
* 55-வது வார்டு கவுன்சிலர் தர்மராஜ் பேசுகையில், ‘’மூங்கில் பூங்கா திட்டத்தை வரவேற்கிறேன். இங்கு மூங்கில் பூங்கா மட்டுமில்லாமல், நடைபயிற்சியும் மேற்கொள்ளலாம். திருப்பூரில் இதேபோல் மூங்கில் பூங்கா அமைத்துள்ளனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’’. என்றார்.
* 5வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசுகையில், ”எனது வார்டில் இன்னும் பல சாலைகள் மண் சாலையாக உள்ளது. இதை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். ரெவின்யு நகர், அம்மன் நகர், பேங்கர்ஸ் காலனி, லட்சுமி நகர், எழில் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழுதடைந்த தார்ச்சாலைகளை புதுப்பிக்க வேண்டும்’’ என்றார்.
* 87வது வார்டு கவுன்சிலர் பாபு பேசுகையில், ”என்.எஸ்.பேக்கரி முதல் பிகேஜி கார்டன் வரை மழைநீர் வடிகால் புதிதாக அமைக்க வேண்டும்.
பாலக்காடு சாலையில் உள்ள நூலகத்தை புதுப்பிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும்” என்றார்.மாமன்ற கூட்டத்தில் நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ் கூறுகையில்:
ஜிடி நாயுடு மேம்பாலம் அதிமுக ஆட்சியில் 10 சதவீதம் மட்டுமே பணி நடந்தது. இதற்கு அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதேபோல், தனது 73வது வார்டு பொன்னையராஜபுரத்தில் 3 அங்கன்வாடி மையங்கள் ரூ.69 லட்சத்தில் கட்டப்பட்டது.
இதற்கு மாநகராட்சி பொது நிதி ரூ.30 லட்சம் செலவிடப்பட்டது. இதற்கும் அவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். சலீவன் வீதி மாநகராட்சி வணிக வளாகத்தில் அதிமுக-வினர் இடம் ஆக்கிரமிப்பு செய்து அலுவலகம் அமைத்துள்ளனர். இதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். இந்த பாலத்தை அமைத்து கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, மேயர் ரங்கநாயகி தலைமையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர், இந்த பாலத்தை கொண்டு வந்த பெருமை அதிமுக.வையே சாரும் என்றனர். இதனால், திமுக-அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பதாகையுடன் வந்த கவுன்சிலர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ராமமூர்த்தி தலைமையில், கைகளில் பதாகை ஏந்தி மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், 12 மற்றும் 13வது வார்டுகளில் சுகாதார பணிகளுக்கு அலுவலகம் உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும்.
உடையாம்பாளையம் முதல் சத்தி சாலை வரை உள்ள பள்ளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், மாநகரம் முழுவதும் போக்குவரத்து இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். குடிநீர் திட்டப்பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோஷமிட்டனர்.
காங்கிரஸ் கவுன்சிலர்கள் கையெழுத்து இயக்கம்
மாமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், நவீன்குமார், சுண்டக்காமுத்தூர் முருகேசன், காயத்ரி ஆகியோர், ஒன்றிய பா.ஜ., அரசின் வாக்குத்திருட்டுக்கு எதிராக மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற்றனர்.