தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் விற்பனை மும்முரம்: மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் பொருட்களை வாங்கினர், இனிப்பு, பட்டாசு வியாபாரம் களைகட்டியது
* சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் மக்கள் படையெடுப்பு
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். ஒரே நேரத்தில் வானகங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போல பட்டாசு, ஸ்வீட் விற்பனையும் களைகட்டியது.
அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இன்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டும் என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்கலாம் என்று மக்கள் நினைத்து இருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், மக்கள் காலை நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை தான் சென்னையிலும் நீடித்தது சென்னையில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. தொடர்ந்து மழையும், இடைஇடையே சாரல் மழை என்பதும் இருந்து கொண்டே இருந்தது.
இதனால், விற்பனை என்பது காலை நேரத்தில் மந்தமாகவே நடைபெற்ற காட்சியை காண முடிந்தது. மழை விட்டதும் மக்கள் பஜார் வீதிகளுக்கு படையெடுக்க தொடங்கினர். மேலும் மழை பெய்தாலும் பராவாயில்லை என்ற எண்ணத்தில் மக்கள் குடை பிடித்த பிடி தீபாவளி பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இதனால், 12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்ட தொடங்கியதை பார்க்க முடிந்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதுவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்னையின் முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிரோட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், தாம்பரம், குரோம்பேட்டை, அம்பத்தூர் பாடி, கீழக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று முழுவதும் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
மாலை நேரத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று பொருட்களை வாங்கி சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். கூட்ட நெரிசலில் கவனமாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி வாயிலாக போலீசார் அறிவுரை வழங்கி கொண்டிருந்தனர். அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதே போல திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதே போல அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மேற்படிப்பு மாணவர்கள் வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு முதல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அனைத்து ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. முன்பதிவில்லா பெட்டியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்றும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களும் ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஸ்வீட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்று வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரயில்கள், தனியார் வாகனங்கள், சொந்த வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலம் சென்று இருப்பதாக தெரிய வந்து உள்ளது.
இதே போன்று தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் நேற்று பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் நேற்று வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர்களை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது. அதே நேரத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாக உள்ளது. பஸ்களிலும் முன்பதிவு என்பது முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று பெரும்பாலானவர்கள் வீடுகளில் அசைவ விருந்துகள் செய்வது வழக்கம். ஏனென்றால் அனைவரும் வீடுகளில் இருப்பது வழக்கம்.
தீபாவளி அன்று காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்ட பின்னர் காலை இட்லி, தோசைக்கே அசைவ உணவு சாப்பிடுவது உண்டு. மேலும் மதியம் நேரத்தில் விதவிதமான அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது உண்டு. மேலும் நண்பர்கள் வீடுகளுக்கும் சமைத்த அசைவ உணவு வழங்குவது வழக்கம். இதனால், அதிகாலையிலேயே மட்டன், சிக்கன் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்க ஆரம்பிக்கும்.
இதனால் தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனையும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரியவந்துள்ளது. சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் தற்காலிக மட்டன் கடைகள் திறக்கப்பட்டு விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கியது. சென்னையை பொறுத்தவரை ஒரு மாதமாகவே கூட்டம் அலைமோதுகிறது.
* கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளன.
* தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து நேற்று வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரயில்கள், சொந்த வாகனங்கள் மற்றும் விமானங்களில் சென்றுள்ளனர்.