தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை: கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1,000 கோடி அதிகம்
சிவகாசி: தீபாவளி பண்டிகையையொட்டி இந்தாண்டு சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1000 கோடி விற்பனை அதிகமாகும். இதனால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்க் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாடு முழுவதும் ஒன்றரை கோடி பேர் பட்டாசு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில், 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடக்கிறது. நடப்பாண்டை பொறுத்தவரை பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடைசி நேரத்தில் தொடர் மழை, சீதோஷ்ன நிலை, பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு, தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.
இருப்பினும் பட்டாசு விற்பனை அமோகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை சூடுபிடித்தது. நேற்று நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சிவகாசியில் இருந்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில் 95 சதவீதம் விற்பனையானதாகவும், நடப்பாண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதால் உற்பத்தி, விற்பனை அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு வணிகம் நடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது. நடப்பாண்டில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி சரவெடி தயாரிக்க அனுமதித்தால், வரும் காலங்களில் ஆண்டுக்கு ரூ.10 அயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும்’ என்றனர்.