தீபாவளியை முன்னிட்டு கர்நாடகாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
பெங்களூரு: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் 20ம் தேதி தொடங்கி 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த 3 நாட்களிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் தீபாவளியையொட்டி அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், அதனால் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது முதல் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, கர்நாடகாவில் பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை செய்யப்படுகிறது. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.