தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது
சென்னை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளதாவது : இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in அல்லது செல்போன் செயலியில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி வரும் அக்டோபர் 16ம் தேதி (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் அக்டோபர் 17ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்டோபர்18ம் தேதிக்கு நாளை மறுநாள், அக்டோபர் 19ம் தேதிக்கு 20ம் தேதியும், தீபாவளி நாளான 20ம் தேதிக்கு 21ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் ரயில்களில் அக்டோபர் 13 முதல் 26ம் தேதி வரை சொந்த ஊர் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.