திருமண சீசன், நவராத்திரி, தீபாவளி நெருங்கும் நேரத்தில் புதிய உச்சம்; தங்கம் விலை பவுன் ரூ.77,800க்கு விற்பனை: வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகம்
சென்னை: திருமண சீசன் மற்றும் நவராத்திரி, தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து ஒரு பவுன் ரூ.77,800க்கு விற்பனையாகி புதிய உச்சம் கண்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 8ம் தேதி ஒரு பவுன் ரூ.75,760 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அந்த விலையை கடந்த 29ம் தேதி விலை சமன் செய்தது. அன்றைய தினம் காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.75,760க்கு விற்பனையானது. அன்று மாலையில் மேலும் அதிகரித்து ஒரு பவுன் ரூ.76,280க்கு விற்பனையாகி புதிய உச்சம் கண்டது.
தொடர்ந்து 30ம் தேதி தங்கம் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.76,960க்கு விற்றது. 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640க்கும் விற்கப்பட்டது. இப்படி தினம், தினம் தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டு வந்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது.
நேற்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,800க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தையும் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 வரை உயர்ந்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வரும் நாட்களில் திருமண சீசன் அதிக அளவில் வருகிறது. அது மட்டுமல்லாமல் நவராத்திரி பண்டிகை, தொடர்ந்து தீபாவளி பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகின்றன. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.