தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 2.60 லட்சம் பேர் முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்றைய தினம் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 2,092, சிறப்பு பேருந்துகள் 760 மற்றும் தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 565 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு பேருந்துகளில் பயணிப்பதற்காக தற்போது வரை 2.60 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு சாலை வழியாக செல்ல மாற்றுவழி அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகளை இன்று முதல் வரும் ஞாயிறுக்கிழமை வரை இயக்க உள்ளது.
சென்னையில் பேருந்து முனையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் விவரம் பின்வருமாறு
* கிளாம்பாக்கம் : புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
* கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் : வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
* கோயம்பேடு : கிழக்கு கடற்கரை (இசிஆர்), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
* மாதவரம் : புதிய பேருந்து நிலையம் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.