தீபாவளி பண்டிகையையொட்டி வசூல் வேட்டை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் ரெய்டு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, கட்டுக்கட்டாக பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வசூல் வேட்டை நடந்ததாக எழுந்த புகாரில் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யவும், பட்டாசு கடைகளுக்கு அனுமதி பெறவும், வாகனங்களுக்கு சிறப்பு எண்கள் மற்றும் விரைவாக பதிவு செய்யவும் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு கவனிப்பும் செய்யப்படுவதாக புகார்கள் சென்றது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவுத்துறை, தீயணைப்புத்துறை, ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் மாறு வேடத்தில் நேற்று காலை புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவணங்கள் பதிவு செய்வதை கண்காணித்து வந்தனர்.
திடீரென 3.30 மணியளவில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சரவணன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டினர். உள்ளே ஆவணங்களை பதிவு செய்ய வந்தவர்களின் பைகளை போலீசார் சோதனையிட்டனர். இதில் லஞ்சப்பணம் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து இரவு 8 மணியளவில் சோதனையை முடித்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிளம்பிச் சென்றனர்.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று மாலை 5 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அவர்களை கண்டதும், புரோக்கர்கள் மற்றும் சில ஊழியர்கள் தப்பி ஓடினர். அங்கிருந்த அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மற்றும் ஒரு புரோக்கரை சோதனை செய்ததில், அவர்களிடம் கணக்கில் வராத ரூ.56,600 இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அறையில் சோதனை செய்தபோது தீபாவளி பரிசாக பட்டு சால்வைகள், பட்டு துணிகள் குவியல் குவியலாக கண்டு பிடிக்கப்பட்டது.
வாகன மோட்டார் ஆய்வாளர்கள் அறையை பார்த்தபோது இரண்டு அறைகளும் பூட்டப்பட்டு இருந்தன. அவர்களை அழைத்தும் வராததால் அந்த அறைகளை சோதனை செய்ய முடியவில்லை. அவர்களின் அறையை சோதனையிட்டால் மேலும் பணம், பரிசு பொருள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.88,100 கைப்பற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராமல் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை- வேட்டவலம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இணை சார்- பதிவாளர் அலுவலகத்தில் (எண் 2) நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை ஏதேனும் நடந்திருக்கிறதா எனவும் சோதனை நடத்தினர்.
மதுரை மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் உதவி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களின் அறையில் இருந்து ரூ.40 ஆயிரம் பணமும், 30 சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.65 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார்பதிவாளர் அலுவலகம், கார், டிபன்பாக்ஸ், மேஜை, ஓய்வறை, கோப்புகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.72,100 பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.53,000 பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.71,000 பறிமுதல் செய்யப்பட்டது. வாழப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.77 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதேபோல், திருச்சி கே.கே.நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20,000, நாகப்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.55,500, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம், புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொதுப்பணி துறையின் கட்டுமானம் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.1.56 லட்சம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.92 ஆயிரம்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் யூனியன் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம், ஓசூர் அருகே ஜூஜூவாடியில் சோதனைச்சாவடியில் ரூ.1,46,800, அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,71,500, பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்திலும் கணக்கில் வராத ரூ.25,350 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* ரூ.80 லட்சம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் 3ம்தேதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமது உள்ளிட்டோர் மீது இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இருப்பினும் போலி சைக்கிள் நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து, பணத்தை இழந்து வந்தனர். ஆனால் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்ததோடு சரி, அதன்பிறகு நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுக்க வருபவர்களிடம் டீலிங் பேசி முடிப்பது தொடர்ச்சியாக நடந்து வந்தது. இதற்கிடையே, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 300க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி மோசடி நடைபெற்று உள்ளதால், தாமாக முன்வந்து அமலாக்கத்துறை இவ்வழக்கில் விசாரணை நடத்தி போலி சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமதுவை அதிரடியாக கைது செய்தது.
விசாரணையில், நிஷாத் அகமது தன்னை காபாற்றிக்கொள்ள ரூ.80 லட்சத்தை வழக்கறிஞரிடம் கொடுத்து, சைபர் க்ரைம் போலீசார் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து முதல்கட்டமாக சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தியை காவல்துறை தலைமையகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
* 3 தீயணைப்பு வீரர்கள் மாற்றம்
விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. அப்போது, 2 நோட்டுகளில் இனாமாக பணம் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் இருந்தது கண்டறியப்பட்டது. அதில், ரூ.4.94 லட்சம் வசூலித்திருப்பதும் தெரிந்தது.
இந்த வசூலில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் வினோத், ஹரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், 3 தீயணைப்பு வீரர்களையும் தற்காலிகமாக வேறு மாவாட்டத்துக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார்.
* வனத்துறை அலுவலர் கைது
வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனபாதுகாவலராக ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ரூ.2.18 லட்சம் அரியர் மற்றும் சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது. இதற்கிடையில் ஜெயவேல் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார்.
இதனால் அவரது மனைவி வசந்தி(55), தனது கணவருக்கு வர வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்க வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகியபோது, அதே அலுவலகத்தில் இ பிரிவில் பணிபுரிந்த இளநிலை உதவியாளர் ஏழுமலை, வசந்தியிடம் நிலுவை தொகை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, நேற்று மாலை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
* பெண் இன்ஜினியர், மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
கோவையை அடுத்த மதுக்கரை ஆர்டிஓ செக்போஸ்ட்டுக்கு நேற்று மதியம் திடீரென வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவலக கதவுகளை சாத்திவிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு அங்குள்ள பீரோ, மேஜை உள்ளிட்டவைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (34) என்பவரிடம் சொட்டுநீர் பாசன மானிய விண்ணப்ப பதிவுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய சேந்தமங்கலம் வட்டார வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் லீலா கைது செய்யப்பட்டார்.
* கல்குவாரி நபரிடம் ரூ.3.50 லட்சம் சிக்கியது
ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் கீழ்பவானி வடிநில கோட்டத்தின் நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கரூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் குமரேசன் பணியில் இருந்தார். அவரை பார்க்க வந்த கல்குவாரியை சேர்ந்த நபரிடம் இருந்த பேக்கினை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், ரூ.3.50 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றினர்.