தீபாவளிக்கு 111 சிறப்பு ரயில்கள் இயக்கம் 20 நாட்களில் 9 கோடி பேர் பயணம்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 111 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாட்களில் இயக்கப்பட்ட ரயில் மூலம் 9 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி, சென்னை - கோட்டயம், சென்னை - மங்களூர், சென்னை - ராமநாதபுரம், கொச்சுவேலி - பெங்களூரு, கொச்சுவேலி - மும்பை, கொச்சுவேலி - டெல்லி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), சான்ட்ராகாச்சி, ஷாலிமார் (மேற்கு வங்கம்), அம்பாலா கண்ட் (ஹரியானா), பரோணி, தண்பாத் (பீகார்) உள்ளிட்ட 20 முக்கிய வழித்தடங்கள் வழியாக 111 தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் 435 சுற்றுகள் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 85 ரயில்கள் 275 சுற்றுகளும், மற்ற மண்டல ரயில்வே சார்பில் 26 ரயில்கள் மூலம் 160 சுற்றுகள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் 9 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து சென்னை கோட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் மட்டும் 176 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதில் 300க்கும் மேம்பாட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டனர். முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணிகளுக்கு தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. பயணிகளின் சந்தேகங்களை போக்கு வகையில் உதவி மையங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4, எழும்பூர் ரயில் நிலையத்தில் 2, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4, பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஒன்று என 11 சிறப்பு டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. பணிகள் எடுத்து வரும் பொருட்களை எடுத்து செல்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். முக்கிய ரயில் நிலையங்களில் அவசரம் உதவிக்கு முதலுதவி மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகள் வசதிக்காக இன்று தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே 6 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.