விடுமுறை நாள் என்பதால் தீபாவளி விற்பனை களை கட்டியது
* மப்டியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
* கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
தர்மபுரி : தர்மபுரியில் நேற்று, தீபாவளி விற்பனை களை கட்டியது. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் திருட்டை தடுக்க மாறுவேடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில், தர்மபுரி நகரில் கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.
நேற்று விடுமுறை தினம் என்பதால், ஜவுளி, நகை மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். நேற்று காலையில் இருந்தே கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாலை நேரம் செல்லச் செல்ல கடைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
தர்மபுரி நகரில் முக்கிய வணிக மையமாக விளங்கும் சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரிதெரு, சித்தவீரப்ப செட்டித் தெரு, துரைசாமி நாயுடு தெரு, பஸ்நிலையம், நேதாஜி பைபாஸ் ரோடு ஆகிய பகுதி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான ஜவுளி, நகைகள் போன்றவற்றை மக்கள் வாங்கிச் சென்றனர்.
தர்மபுரி நகரில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது. சின்னசாமிநாயுடு தெரு சாலையில், பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன. கடைகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தர்மபுரி டவுன் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பெண் போலீசார் சேலை மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு, ஜவுளி வாங்க செல்வது போல கூட்டத்துடன் கூட்டமாக நின்று, பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா என்று கண்காணித்தனர்.
தர்மபுரி நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலமும் போக்குவரத்து நெரிசல், குற்றச்செயல்கள் தடுப்பு கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.
தர்மபுரி புறநகர் பஸ்ஸ்டாண்டில் போலீசார், பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணம், அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி போலீசார் ஒலிபெருக்கியில் எச்சரித்துக் கொண்டே இருந்தனர். மேலும், முன்பின் தெரியாதவர்கள் வந்து பேசினால், அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
2 வரிசைகளாக வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு
தீபாவளி பண்டிகையையொட்டி, தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் ரோடு ஆகிய சாலைகளில் நேற்று முன்தினம் முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து, முகமது அலி கிளப் சாலை வழியாக நான்கு ரோடு நோக்கி வெளியே செல்லலாம். சின்னசாமி நாயுடுதெரு சாலை வழியாக உள்ளே நுழையாமல் பஸ் நிலையம் நோக்கி நகருக்குள் உள்ளே வரவும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதே போல் பஸ் நிலையம் முதல் ராஜகோபால் பூங்கா வரை சாலையில் தடுப்பு ஏற்படுத்தி 2 வரிசைகளாக வாகனங்கள் நிறுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது .
வாட்ச் டவர் அமைப்பு
தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தர்மபுரி நகரில் கூட்ட நெரிசல் ஏற்படும். இந்த கூட்ட நெரிசலில் குற்றச் செயலை தடுக்க வாட்ச் டவர் அமைக்கப்படுவது வழக்கம். தற்போது தர்மபுரி காமராஜர் சிலை எதிரே உள்ள சந்திப்பு சாலையில், வாட்ச் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் வாட்ச் டவர் அமைக்கப்பட உள்ளது. மேலும் 5 இடங்களில், தீபாவளி பண்டிகையொட்டி சிசிடிவி கேமரா வைத்து திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் தடுக்க போலீசால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.