தீபாவளி ஒட்டி மதுரையில் செல்லூர் முறுக்கு மற்றும் அதிரசம் விற்பனை சூடுபிடித்துள்ளது!!
மதுரை: தீபாவளி ஒட்டி மதுரையில் செல்லூர் முறுக்கு மற்றும் அதிரசம் விற்பனை சூடுபிடித்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறையாக 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் பழமை மாறாமல் இந்த நொறுக்குத் தீனி தயாரித்து வருகின்றனர். பட்டாசு, புது ஆடைகளுடன் இனிப்பு இல்லாத தீபாவளி கிடையாது. சமீபகாலமாக வடமாநில இனிப்பு வகைகளுக்கு அதிக மவுசு கூடி இருந்தாலும் பாரம்பரியமாக தீபாவளிக்கு தயாரிக்கப்படும் முறுக்கு மற்றும் அதிரசம் வகைகளுக்கு இன்றும் கிராக்கி குறையவில்லை. சீர் பலகாரங்களில் தொடங்கி விழாக்களில் முறுக்கு மற்றும் அதிரசத்திற்கு தனியிடம் உண்டு.
மதுரை அருகே செல்லூரில் அரிசி முறுக்கு, கார முறுக்கு, பூண்டு முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு என ரகரகமாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.5 தொடங்கி ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுத்தமாக தயாரிக்கப்படும் அதிரசம் மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெயர்பெற்றது. தீபாவளி நெருங்கவுள்ளதால் 24 மணி நேரமும் வியாபாரம் பரபரப்பாக நடக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மில்க் ஸ்வீட்ஸ் வருகையினால் அதிரசம் மற்றும் முறுக்கு விற்பனைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிரச தயாரிப்பில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.