முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்தால் அசாமில் 10 ஆண்டு சிறை: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
கவுகாத்தி: முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதா அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அசாம் பலதார திருமண தடை சட்டம் அசாம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா,’ வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் முதலமைச்சரானால், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன். இது இந்த அவைக்கு நான் அளிக்கும் உறுதிமொழி’ என்றார்.
அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட பலதார திருமண தடை சட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் திருமணத்தை மறைப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கிறது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும். அத்தகைய திருமணங்களைச் செய்துவைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் பலதார மணம் செய்பவர்கள் அரசு ேவலைக்கு தகுதியற்றவர்கள்.
அரசு நிதிஉதவி, மானியம் அவர்களுக்கு வழங்கப்படாது. பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் போன்ற எந்தவொரு தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடியாது. அதேசமயம் இந்தச் சட்டம் அசாமின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளான பழங்குடியின மக்கள் வசிக்கும் போடோலாந்து, கர்பி அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் ஹில்ஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.