ராசிபுரத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
*அமைச்சர் தொடங்கி வைத்தார்
ராசிபுரம் : ராசிபுரத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை ஒலிம்பிக் தீபம் ஏற்றி அமைச்சர், கலெக்டர் தொடங்கி வைத்தனர்.ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்காமூர்த்தி ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இப்போட்டிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகள், தனியார், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 477 மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள விளையாட்டு வீர்களுக்கான போட்டிகளில், 501 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட அளவில் தடகள போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 600 மீ ஓட்டம், 80 மீ தடையோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளிலும், 17 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 800, 1500, 3000 மீ ஓட்டம், 100 மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல் போட்டிகளிலும், 19 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 800, 1500, 3000 மீ ஓட்டம், 100 மீ, 400 மீ தடைதாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 14 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 600 மீ ஓட்டம், 80 மீ தடையோட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல், தொடர் ஓட்டம், 17 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 800, 1500, 3000 மீ ஓட்டம், 110 மீ தடைதாண்டி ஓட்டம், உயரம், நீளம், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், 19 வயதிற்குட்பட்டோர் 100, 200, 400, 800, 1500, 3000 மீ ஓட்டம், 110, 400 மீ தடைதாண்டி ஓட்டம், உயரம், நீளம், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.